Excerpt for மௌனத்தின் வார்த்தைகள் - காதல் கவிதைகள் by , available in its entirety at Smashwords
மௌனத்தின் வார்த்தைகள்

காதல் கவிதைகள்


உருக்கம்

ராஜா முகமது காசிம்


ISBN: 9781370069279

Title: Mounathin Varthaigal - Kadhal Kavithaigal

Author: Raja Mohamed Kassim

Publisher: Smashwords, Inc.


முன்னுரை


வணக்கம்!

பல ஆண்டுகளாக இணையதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் நான் எழுதிய காதல் கவிதைகளின் தொகுப்புதான் இந்த நூல். என்னை எழுத தூண்டிய இறைவனுக்கும், அவனது படைப்புகளுக்கும் நன்றி. என் கவிதைகளை வாசித்து அதை பாராட்டி மேலும் எழுத உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. என் கவிதைகளை விமர்சித்து என் குறைகளை திருத்திக்கொள்ள உதவிய நல்லுங்களுக்கும் மிக்க நன்றி.


என் கவிதைகளை வாசித்துப் பாருங்கள், பின்பு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.


அன்புடன்,


ராஜா முகமது காசிம்

healerrmk@gmail.com


**********


சிறுக சிறுக சேர்த்த

காற்றின் ஈரப்பதத்தை

மொத்தமாக சேர்த்து வைத்து

மழை காலத்துக்கு காத்திருக்கும்

மேகம்!


நேரம் கனிகையில்

சேர்த்து வைத்ததை

மழைநீராய் மடைத்திறந்து

பெய்யும்!


அதைப்போல்

சிறுக சிறுக சேர்த்த

சிறுக சிறுக வளர்த்த

உன் நினைவுகள் அனைத்தையும்

உன் மீது பொழிந்துவிட்டேன்

அன்பாக! காதலாக! கவிதையாக!


அதில் நனைவதும்

குடைபிடித்து கடந்துசெல்வதும்

உன் விருப்பம் - ஆனால்


எத்தனை குடைபிடித்தாலும்

மழை நிற்காது

பெய்துகொண்டே இருக்கும்!

இது மேகத்தின் காதல்..!


**********


எப்படி விளக்குவது என்று

தெரியவில்லை


கூட்டுப்புழுவிலிருந்து

வெடித்து வெளியேறி

பறக்கும் வண்ணத்து

பூச்சிக்கு - புரியும்


என்னைப்பார்த்து

புன்னகைக்கும்

உன்னை - பார்க்கும்

என் மனநிலை..!


**********


குளிர்ந்தும் குளிராத இரவு

இருண்டும் இருளாத வானம்

மறைத்தும் மறைக்காத மேகம்

உதித்தும் உதிக்காத நிலவு


சில்லென வீசும் காற்றை

துணைக்கழைத்துக் கொண்டு

பூமியில் கால் பட்டும் படாமல்

புல் வெளியில் நடந்துவருகிறாள்


அவள்!


மல்லிகை தோட்டத்தில்

ஒற்றை ரோஜா

அதுவும் மஞ்சள் வர்ணத்தில்


மனம் தீண்டும் பாவாடை

மண் தீண்டாமல்

மெல்ல உயர்த்தி

இரு-கை தாங்கி


நடந்து வருகிறாள்

தேவதையாக


நட்சத்திரங்களுக்குள் சலசலப்பு

யாருடா அது - பூமியில்

நமக்குப் போட்டியாக என்று

நானென்ன செய்வேன்


மனம் குலைந்தேன்

சிந்தனை மறந்தேன்

சிலையென நின்றேன்

பெண் சிலையே கண்டு..!


**********


மௌனத்தில் புன்னகைக்க - ஓர

கண்ணாலே நீசிரிக்க

சிதறுதடி என்மனது

வான்பிளந்த மழைதுளியாய்...


என் நிலவை வர்ணிக்க

என் மனதை நான் திறக்க

கிடைத்திட்ட வாய்ப்பெனவே

தவறாமல் பயன்படுத்த

தமிழாலே அலங்கரித்தேன்

என் மனதை நான் திறந்தேன்


உன்னைப்போல் ஊமையில்லை

உன் வளையலும் கொலுசும்

என்னிடம் பேசுகின்றன

அப்ப அப்ப..


உன் கண்களைப் போல

உன் புன்னகையை போல

பேசுகிறது என்னிடம்

இரட்டை அர்த்தத்தில்


தலை தூக்கி

நீ பார்க்கும்

ஒரு பார்வை சொல்லுதடி


உன் மனதில்

ஒரு மூலையில் - எனக்கும்

ஒரு இடமுண்டு என்பதை..!


**********


உண்மையை சொல்வதானால்

காதலிப்பதைவிட

காதலிக்கப்படுவதே

ஆனந்தம்


கவிதை எழுதுவதைவிட

கவிதையை வாசிப்பதில்

கிடைக்கும் ஆனந்தம்போல


மலரை நுகர்வதைவிட

மலரை இரசிப்பதில் கிடைக்கும்

ஆனந்தம்போல


உனக்குப்பிடித்த

ஒருவரிடம் மனதைப்பறிகொடு

அப்பறம் புரியும்

காதலின் அருமை..!


**********


உலக அழகியாம்...

வாய்பிளந்து - வேடிக்கை

பார்த்துக்கொண்டிருந்தேன்

குறுக்கே நீ சென்றாய்


உன்னழகை கண்டபின்

பிளக்க வாய் போதவில்லை

மனதையும் சேர்த்து

பிளந்து வைத்தேன்..!


**********


பூவுக்குள் கருவாகி

நிலவைப்போல் முகம்வாங்கி

சிற்பிக்குள் முத்தைப்போல்

நிலவுக்குப் போட்டியாக

இம்மண்ணில் பிறந்தவளோ

என் அழகுதேவதை


நிலவெனப் பிறந்ததால்

உன்னை நெருங்கமுடியாமல்

வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்..!


**********


வானில் தோன்றி மறையும்

வெள்ளியைப்போல்

என் வாழ்வில் -நீ

உன் வாழ்வில் -நான்


சில காலம் வந்தாலும்

கடந்துதான் சென்றாலும் - நீ

விட்டுச்சென்ற கால்தடங்கள் - என்றும்

மறையாது கண்மணியே


சிலையாய் சிற்பமாய் - என்றும்

என் மனதில் நீ

உன் நினைவில் நான்..!


**********


கடவுள்

இருக்கிறானா என்று – ஒரு

சந்தேகம் இருந்தது


கனகச்சிதமாக

உன்னை பார்த்தபின்

நம்புகிறேன்


எவனோ இருக்கிறான்..!


**********


நிலவைப்பத்தி

எத்தனை புத்தகம்

வேண்டுமானாலும் இருக்கலாம்


இருந்தும்...

ஆயிரம் புத்தகம் தராத

அனுபவம் பெற

கொஞ்சம் அண்ணாந்து

நிலவைப்பாருங்கள்


புத்தகம் சொன்னது அறிவு

இது அனுபவம்


என் கவிதைகள்

என்ன வேண்டுமானாலும்

சொல்லலாம் - ஆனால்


என் அன்புக்குரியவளை

முழுமையாக புரிந்துகொள்ள

நிச்சயமாக முடியாது...


கொஞ்சம் நிமிர்ந்து

அவளைப்பாருங்கள்.

ஆயிரம் கவிதை சொல்லாததை

அவள் கண்கள் சொல்லும்..!


**********


ஒரு தடவை திருடியவள் - நீ

அனுதினமும்

பறிகொடுப்பவன் நான்

மனதை..!


உன்மீது தப்பில்லை

திருடியவன் தூங்கிவிடுவான்

நிம்மதியாக - பறிகொடுத்தவன்

எப்படித் தூக்குவான்?

இதுதானே உலக வழக்கம்!


எல்லோரும்

திருட்டுப்போன பொருளை

எண்ணி ஏங்குவர்! - நான்

திருடியவளை எண்ணி

ஏங்குகிறேன்..!


என் மனதை

நீயே வைத்துக்கொள் - இனி

அது உனக்கே சொந்தம்


திருட்டுக்கு பரிகாரமாக

உன்னை என் மனசிறையில்

ஆயுள்கைதியாக அடைகிறேன்

விடுதலை மட்டும் கேட்காதே..!


**********


தனிமையில் நீ இருக்கையில்

யார் நினைவு

அலைபாய்கிறதோ


இயற்கையின்

ஒவ்வொரு அசைவும்

யாரை ஞாபகப்படுத்துகிறதோ


இளையராஜாவின்

காதல் பாடல்

யார் முகத்தை

நினைவு படுத்துகிறதோ


காலையில் எழுகையில்

இரவு உறங்குகையில்

யார் நினைவு

வந்துபோகிறதோ


வாழ்க்கையின்

சந்தோசமான நாட்களிலும்

துன்பமான நாட்களிலும்

யார் நினைவு

வந்துபோகிறதோ


நீ வாசித்த கவிதையை

அடுத்ததாக - யார்

வாசிக்க வேண்டுமென

நீ விரும்புகிறாயோ


நீ படித்து சிரித்த

நகைச்சுவை துணுக்குகளை

யாருக்கு அனுப்பவேண்டும்

என்று மனம் நினைக்கிறதோ


நீ அனுபவிக்கும் இன்பத்தை

யாருடன் பகிர்ந்து கொள்ள

மனம் துடிக்கிறதோ


நீ ரசித்த சினிமா காட்சி

நீ ரசித்தப் பாடல்

யாரை நினைவு படுத்துகிறதோ


அவளை / அவனை

எந்தக் காரணத்தைக் கொண்டும்

எதற்காகவும் இழந்துவிடாதே


விதிவசத்தால்

ஒருவேளை இழந்தாலும்

மறந்து விடாதே


உன் ஜீவனில்

முழுமையாக குடிகொண்டிருக்கும்

அவளோ அவனேதான்

நீ உயிர்வாழக் காரணம்..!


**********


பெண்ணே..!

எனக்கு சுதந்திரம் வேண்டாம்

உண்மைதான், சத்தியமாக

எனக்குச் சுதந்திரம் வேண்டாம்


என்றும் உன் அடிமையாகவே

இருக்க விரும்புகிறேன்- நான்!

உன் மனச்சிறையில்

ஒரு சின்ன இடம் கொடு

அப்படியே உன் கட்டிலிலும்


உன் தேவைகளை நிறைவேற்றும்

அடிமை நான்

எனக்குச் சுதந்திரம் வேண்டாம்!


**********


விழித்துக்கொண்டே

எல்லோரும் விழத்துடிக்கும்

கிணறு – காதல்


அவள் பார்வைபட்டாலே

கரைந்துவிடுவேன் - நான்

அவள் புன்னகையை பார்த்தாலே

பஸ்பமாவெம் - நான்

அவ்வாறு இருக்கையில்


அவள் அருகே அமரும் பொழுது

அவள் சிரித்து பேசும் பொழுது

அவள் விட்டுப் பிரியும் பொழுது


செத்துச் செத்து பிறக்கிறேன்

அவளுக்காக ....

அவளுக்காக மட்டுமே..!


**********


வானம் கருக்கவில்லை

மேகமூட்டம் இல்லை - ஆனால்

வானில் ஒய்யாரமாக

ஒரு வானவில்

வாய்பிளந்து நிற்கிறது


வீதியில் நடந்துவரும் உன்னை

வேடிக்கை பார்க்கிறதோ..?


**********


இது பாகுபலியின் காதல்

பல்வால் தேவனின் காதல்

தேவசேனையின் காதல்


அவள் அழகு, வீரம், வாள்வீச்சு

வாளினும் கூரிய

அவள் கண்களைக்கண்டு

காதலுற்றான் பாகுபலி

தேவசேனையின் மீது


அவன் வனப்பு

அவன் வீரம், அவன் திறமைக்கண்டு

காதலுற்றாள் தேவசேனை

பாகுபலியின் மீது


அவள்

யார் என்று தெரியாது

எப்படி இருப்பாள் புரியாது

சித்திரம் மட்டும் கண்டு

காதலுற்றான் பல்வால் தேவன்

தேவசேனை மீது


இந்த மூன்றில் - எது

உயரிய காதல்?


பாகுபலி விரும்புகிறான்

என்று சந்தேகம் இருந்தும்

காதல்க் கொண்டான் - இது

அவன் தவறா?


மனதை கட்டுப்படுத்த

எவரால் முடியும்?

அண்ணனாக, அவன் கெட்டவன்

மகனாக, அவன் கெட்டவன்

காதலனாகவே வாழ்ந்தான்

கடைசிவரை..!

அவளை பார்த்துக்கொண்டே

அவள் நினைவில்

அவள் நிழலில்

கடைசிவரையில்


தேவசேனையைத்தவிர

வேறுறொரு பெண்ணை

மனதிலும் நினைக்காதவன்

திருமணமும் செய்யாதவன்

அவளுக்காகவே வாழ்ந்தான்


இது பல்வால் தேவனின் காதல்

உண்மையான காதல்

பாகுபலி இருக்கும் வறை

அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை

அவர்களை பிரிக்கவும் நினைக்கவில்லை


பாகுபலி இறந்த பின்பும்

எல்லா வாய்ப்பிருந்தும்

அவளை அனுபவிக்க நினைக்கவில்லை

அவளை அடையத் துடிக்கவில்லை

தவறாக நடக்கவில்லை


அவளை பார்த்துக்கொண்டே வாழ்ந்தான்

அவள் இருப்பு ஒன்றே

போதுமானதாக இருந்தது

அவனுக்கு


அவன் அன்பு

கொடூரமானதாக இருக்காலாம்

அவன் வெளிப்படுத்திய விதம்


தப்பாக இருக்கலாம் – ஆனால்

அவன் காதலில் தப்பில்லை

வா ஒன்றாக செத்துப் போகலாம்

என்ற ஒற்றைவரி

பல்வால் தேவன் உரித்தது

அவன் காதலை

புரிந்து கொள்ள கடைசி வாய்ப்பு

தேவசேனைக்கு


இது பல்வால் தேவனின் காதல்

உண்மையான காதல்

கடைசிவரை

புரிந்து கொள்ளவில்லை - அவள்

அவன் காதலை


அவளுக்காகவே வாழ்ந்தான்

அவளாலேயே வாழ்ந்தான்

அவளைப் பார்த்துக்கொண்டே

உயிர் துரந்தான்...

மறுபடியும் பிறப்பான்


அவளுக்காக காத்திருப்பான்

அடுத்த ஜென்மத்திலாவது

அவள் புரிந்துகொள்வாளா?

அவன் உண்மைக் காதலை?


இது பல்வால் தேவனின் காதல்

உண்மையான காதல்!


------------

பாகுபலி 2, இரண்டாவது முறையாகப் பார்க்கும் போது, கடைசிக் கட்டத்தில் பல்வால் தேவன், தேவசேனையைப் பார்த்து, வா ஒன்றாக செத்துப் போகலாம் என்று கூரிய வசனம். என் மனதை அதிகம் பாதித்தது. பல்வால் தேவனுக்காக, அவன் காதலுக்காக இந்தக் கவிதை.


**********


பச்சைக் கம்பளமாய்

உதறி விரிக்கப்பட்ட புல்வெளி

பனி படர்ந்த காலை வேளையில்

பாதனியற்ற வெறும் காலுடன்


பாதம் குளிர நடந்து மகிழ்ந்தீர்கள்

குளிர்ந்தது மனதும் தான்

படுத்து புரண்டீர்கள்

நினைந்தது நீங்கள்தான்


பச்சை புல்லின் அழகை

பசுமையை, அதன் வனப்பை

பார்த்து ரசித்தீர்கள்

மகிழ்ந்தது நீங்கள் தான்


உங்கள் நினைவில்

அடிக்கடி வரும் அந்த நிகழ்வுகள்

ஆனந்தம் உங்களுக்குத் தான்

மனஅமைதி உங்களுக்குத் தான்


இதில் எதையாவது

புல் அறியுமா?

புல்லுக்குப் புரியுமா?

இதுதான் காதல்..!


உங்கள் உள்ளம் கவர்ந்தவளை

பாருங்கள், ரசியுங்கள், சிரியுங்கள்

மனதார நேசியுங்கள்

அவளுடனே வாழுங்கள்


அவளுக்கு - தகவல்

சொல்ல வேண்டிய அவசியமில்லை!

அவளுக்கு புரியவேண்டிய

அவசியமும் இல்லை!

அவள் அனுமதியும் தேவையில்லை!


அவள் வாழும் மனதும்

அவளின் நினைவுகளும் முழுமையாக

உங்களுக்கே சொந்தம்!

காதல் செய்யுங்கள் முழுமையாக

அவளை!


அந்த காதல்

அந்த உணர்வு

அந்த ஆனந்தம்

அந்த நினைவுகள்

உங்களுக்கே சொந்தம்


ஆனால் அவள்..?


**********


நெருப்பினை

தழுவிய நினைவுகள்

என்றும் என்

மனதில் நிழலாடும்


அந்த உஷ்ணம்

அந்த துடிப்பு

அந்த ஸ்பரிசம்

அந்த வாசனை


ரோஜா இதழினும்

மென்மையான

உன் கழுத்தில்

உறவாடிய


அந்த நிமிடங்கள்

வருடம் பல கழித்தும்

நெஞ்சம் மறப்பதில்லை..!


**********


டமில் கேட்டு வளர்ந்த நான்

முதன் முதலாக

தமிழ் கேட்கிறேன் - அதுவும்

உன் மலர்வாயிலிருந்து


காய்ந்த பாலைவனத்தில்

அருவி பெருக்கெடுத்துஓடியது


பாலைவனம்

முதன் முதலாக

நீர்வீழ்ச்சியைக்கண்டது..!


**********


மிஞ்சியது

ஏக்கமும் ஏமாற்றமும் தான்!

உன்னை நேசித்தற்கு


நீ தந்த பரிசு

உன் மீது பைத்தியமானேன்

நீயே உலகென வாழ்ந்தேன்


ஒரு கன்னத்தில் அரைந்தாய்

மரு கன்னத்தை காட்டினேன்

அதிலும் அரைந்துவிட்டாய்


கன்னத்தில் வலியில்லை - ஆனால்

கண்கள் கலங்குகின்றன


உன்னையே

சுற்றிச் சுற்றி வந்த

என் மனதிற்கு புரியவில்லை


உன் அன்பிற்குரியவன்

உன் பாசத்துக்குரியவன்

உன் காதலுக்குரியவன்

நானில்லை என்று..!


**********


வாழ்க்கை வாழ்வதற்கே

என்று தெறியும்- நான்

வாழப் பிறந்தேன்

என்பதும் புரியும்


பிறப்பிற்கும் இரப்பிற்கும்

உல்ல இடைவெளியே வாழ்க்கை

என்பதும் புரிந்துவிட்டது


நீ இல்லாமல்

வாழ்ந்து என்னப் பயன்

என்றுதான் தெரியவில்லை..!


**********


உன் கணவன்

உன் பிள்ளைகள் - என

உனக்கொரு வாழ்க்கை

அமைந்தும்..!


நான் உன்னை

திருமணம் செய்திருக்கவேண்டும்

தவறு செய்துவிட்டேன் - என


நீ சொன்ன - அந்த

வார்த்தை போதும்!

என் காதல்

வென்றுவிட்டது!

காதலனாக

எனக்கும் வெற்றிதான்..!


(வெறவழி, இப்படி ஏதாவது சொல்லி மனச தேற்றிக்க வேண்டியதுதான்)


**********


நினைவு இருக்கிறதா

நாம் கைகோர்த்து நடந்த

அதே கோயில் திருவிழா

நம்மூரில்..


முன்பைவிட

கடைகள் கூடியிருக்கிறது

கூட்டம் அதிகமாக இருக்கிறது

ஆனாலும் கலகலப்பில்லை

ஏதோ ஒரு வெறுமை


அன்று...


பேசமுடியாத சூழ்நிலை

நம் கண்கள் மட்டும்

நலம் விசாரித்து

சிரித்துக்கொண்டன


கூட்டத்தின் நடுவே

யாரும் பார்த்துவிடாமல்

பட்டும் படாமல்

தொட்டும் தொடாமலும்


நம் கைகள் மட்டும்

அன்பை பகிர்ந்துக்கொண்டன

மற்ற உடலுறுப்புகள்

பொறாமையில் துவண்டன..!


**********


ஜன்னலின் வெளியே மழை

மனதின் உள்ளே -சாரல்

இரவின் இனிமை புரியவில்லை

தனிமை என்னை தாக்கியது


உள்ளம் காயப்பட்டது

எங்கே என்

தூக்கம், இனிமை, நிம்மதி?

எங்கே துளைத்தேன்?

யார் திருடியது?


நீதான் தோழி

நீயேதான்..

உன்னால்தான் இந்த

கசப்பு தவிப்பு எல்லாம்..!


**********


கண்ணே!

கண்ணீர் சிந்தாதே

நீ அழுதால்

என் மனம் தாங்காது


சேர்த்துவை கண்ணீரை

என்றோ ஒருநாள் - என்

மரணச்செய்தி வரும் - அன்று

எனக்காக ஒருசொட்டு!

ஒரே ஒருசொட்டு, கண்ணீர்சிந்து


அது போதும் எனக்கு

உன் மனதிலாவது வாழ்ந்தேன்

என்ற நிம்மதியுடன்

என் ஆன்மா சாந்தியடையும்..!


**********


பகல் முழுதும்

கைகோர்த்து

நடைபழகு - என்று

அழைக்கும் உன் வளையல்கள்


அன்பேவா, முன்பேவா

என்றழைக்கும் உன்

கால்கொலுசும்


இரவில் மட்டும்

மௌனம் காப்பது ஏன்? - உன்

வெட்கத்தின் வெளிப்பாடா - உன்

பெண்மையின் பேறுகாலமா


உன் விரல் தீண்ட

இடுப்பில் செல்லமாய் கிள்ள

உன் சங்கு கழுத்தில்

செல்லக் கடி கடிக்க - உன்

உதடுகளில் உறவாட


கைகோர்த்து

கால் பின்னி - உன்

இடையழந்து


இடைகளின்றி இன்பம்பெற - உன்

இடை முழுதும் நான் அளக்க - நான்

இடை இடையே தடுமாற - நீ

இடை இடையே புன்னகைக்க


இன்பமோ இன்பமடி

இப்படியும் ஒரு ஆசை

எப்போதும் நிறைவேறும்

காத்திருக்கும் காலம் தான்

கடந்து செல்லுதடி


ஆண்களுக்கு ஆசை உண்டு

பெண்களுக்கும் மீசை உண்டு..!


**********


உயிர் கொத்தி பறவை

ஒவ்வொரு நொடியும் - என்

உயிர் குடிக்கும் அவள்!


என்ன தாகமோ

என்று அடங்குமோ

என்னுயிர் குடித்து

அவள் வாழ்கிறாள்


பூமியின் உயிர் குடித்து

வளரும் மரம்

கனியை மனிதனுக்கு

கொடுப்பது போல்


என்னுயிர் குடித்து

வளரும் அவள் - அன்பை

அவனிடம் காட்டுகிறாள்..!


**********


உன் கணவன்

உன் பிள்ளைகள் - என

உனக்கொரு வாழ்க்கை

அமைந்தும்!


நான் உன்னை

திருமணம் செய்திருக்கவேண்டும்

தவறு செய்துவிட்டேன் - என


நீ சொன்ன - அந்த

வார்த்தை போதும்!

நம் காதல்

வென்றுவிட்டது!

காதலனாக

எனக்கும் வெற்றிதான்!


(வேறுவழி, இப்படி ஏதாவது சொல்லி மனசை தேற்றிக்க வேண்டியதுதான்)


**********


தன் ஜோடிப்புறா

என்றாவது வரும் என்ற ஆசையில்

கோபுரத்தில் கூடுகட்டியது

மாடப்புறா


அது வரும்! ஆனால் வராது

என்று கடைசிவரை

உணராத மாடப்புறா

மடப்புற ஆனது..!


**********


கண்ட துண்டமாக வெட்டிவிடு

தீயிட்டுக்கொழுத்து

தோலை முழுதும் உரித்துவிடு

இருதயத்தை வேரோடு பிடுங்கு

உனக்காக மகிழ்ச்சியாக

ஏற்றுக்கொள்கிறேன்


மறந்துவிடு என்று மட்டும்

சொல்லாதே...

அந்த வலியை தாங்கும்

சக்தி என்னிடமில்லை..!


**********


காக்கைக்கூட்டத்தில்

வெண்புறாவாய் - உன்

கருங்கூந்தலில் எட்டிப்பார்க்கும்

ஒத்தை வெண்ணரை


பட்டைத்தீட்டாத வைரமாய்

மெல்ல மங்கும் – உன்

கண்பார்வை


வெயில் தாங்காத

ரோஜா இதழாய் - மெல்ல

காய்ந்த உன்இதழ்கள்


இரண்டு மூன்று என

திரும்பச் சொல்ல கேட்கும்

உன் காதுகள்


உன் இளமையை

வருடங்கள் மெல்லத்தின்று

முதுமை எட்டிப்பார்க்கும்போது


துள்ளிக் குதித்து

நடந்த நீ – நடைதளர்ந்து

கைதாங்கல் இருந்தால்

நன்று என நினைக்கும் போது


எனக்கென யாருமில்லை

என்ற எண்ணம் தோன்றி

சாய்ந்து அழ - தோழ் ஒன்றை

உன் மனம் தேடும் போது


மெத்தையும் தலையணையும்

போதாது - நிம்மதியாய் சாய

தோழ் வேண்டுமென - உன்

மனம் நினைக்கும் போது


என்றும் மறவாதே

எந்தச் சூழ்நிலையிலும் – நான்

இருக்கிறேன் உனக்காக


நான் காதலித்தது

உன்னைத்தான் …

முழுமையாக உன்னைத்தான்

உன் உடலை அல்ல


உயிர் உடலில் தேங்கும்

நாள் வறை - என் உயிராய்

ஓடுவது நீதான்

நான் சுவாசிப்பது

உன் நினைவுகளைத்தான்


உலகமே உன்னைக் கைவிட்டாலும்

நான் இருக்கிறேன் என்றும் உனக்காக

உனக்காக மட்டும்…


ஆனால் உனக்கு

என் நினைவு வருமா..?


**********


ஆசைப்பட்ட பெண்ணோடு

சேர்ந்து வாழ்வது மட்டும்

காதல் இல்லை..!


நம்மைவிட ஒருவன்

அவளை சிறப்பாக

பார்த்துக் கொள்வான் என்றால்

அவளை விட்டுக்கொடுப்பதே

உண்மையான காதல், அன்பு


நம் ஆசையைவிட

அவள் வாழ்க்கையே

முக்கியம்..!


அவள் - ஒரு

சிறப்பான வாழ்க்கை வாழ்கையில்

வேறு ஒருவனுடன் வாழ்ந்தாலும்

அவள் முகத்தில் புன்னகை

மனதில் மகிழ்ச்சி காண்கையில்


இந்த உலகில்

ஏதோ ஒரு மூழையில்

சிறப்பாக சந்தோசமாக

வாழ்கிறாள் என்ற செய்தி கேட்கையில்


அவளோடு வாழ்வதை விட

அதிக மகிழ்ச்சியைத்தரும்

சொன்னால் புரியாது

அனுபவித்தால்தான் புரியும்..!


இது தியாகமல்ல

நாம் நேசிப்பவர் - சிறப்பாக

வாழவேண்டும் என்று என்னும்

இந்த உணர்வுதானே

காதல்..!


**********


பெண்ணே..!

உன் மனதில் நானில்லை

என்றாய்

துடி துடித்துப்போனேன்!


பின்புதான் - உனக்கு

மனசே இல்லை

என்று தெரிந்து

ஆறுதல் அடைந்தேன்..!


**********


தனிமை..!

தனிமையில் மௌனம்..!

தனிமையின் மௌனத்தில்

உன் நினைவுகள்..!


தனிமையில் மௌனத்தில்

உன் நினைவுகளுடன்

நான்..!


இதைவிட வேதனை

என்ன உண்டு- எனக்கு

இந்த உலகில்..!


**********


கண்டம் துண்டமாக வெட்டிவிடு

தீயிட்டுக்கொழுத்து

தோலை முழுதும் உரித்துவிடு

இருதயத்தை வேரோடு பிடுங்கு

உனக்காக மகிழ்ச்சியாக

ஏற்றுக்கொள்வேன்!


மறந்துவிடு...

என்று மட்டும் சொல்லாதே

அந்த வலியை தாங்கும்

சக்தி மட்டும் என்னிடமில்லை!


**********


நம்மிடம் கூறப்படும் பொய்கள்கூட

நம் உறவையும் பாசத்தையும்

பாதுகாக்கும் முயட்சியென்று

புரிந்துகொள்ளுங்கள்


உண்மையைப் பேசசொல்லி

உங்கள் பாசத்துக்குரியவர்களை

வற்புறுத்தாதீர்கள்


அவர் சொல்லும் ஒரு மெய்

உங்கள் உறவுக்கு

மரண குழி தோண்டலாம்


மனிதனுக்கு

பொய்யுரைக்க தெரிவதால்தான்

பல உறவுகள் இன்னும் நீடிக்கின்றன..!


**********


என் காதலை

விளக்குவது கடினம்


அது திருக்குறள் மாதிரி

சொல்ல - இரண்டு

வரிகள் போதும் - விளக்க

நூறு வரிகள் தேவைப்படும்..!


**********


காற்று வரட்டும்மென

பேருந்து ஜன்னலை

திறந்து வைத்து

புறப்பட காத்திருந்தான்


டேய்... பார்த்துப்போடா என

இவன் பெயரில் அலட்டல் வர

அதிர்ச்சியுடன் ...

ஒலி வந்த வழி தேடினான்


இளம் பெண்ணொருத்தி

சிறுவனை - கைபிடித்து

கூட்டத்தில் அழைத்துச்சென்றால்


அவன் கண்கள்

அவள் முன்நோக்கிச்சென்றது

அவன் மனமோ

பத்து பதினொரு வருடங்கள்

பின்னோக்கிச்சென்றது


அதே அலட்டல்

அதே பெண் - அன்று

இவன் காதலியாக


சந்தர்ப்பத்தில் பிரிந்தவர்கள்

மீண்டும் காண மாட்டோமா - என

பல வருடம் காத்திருந்து - அவள்

முகம் கூட மறந்துபோனான்


எதிர்பாரா விதமாக

மீண்டும் அவள்...

பேருந்து நிலையத்தில்

சகப்பயணியாக


நன்றாக இருக்கிறாயா - என

ஒரு வரி கேட்க

அவள் முகம்பார்த்து

புன்னகைக்க - அல்லது

அவள் முகமாவது

முழுமையாகப் பார்க்க

மனம் துடித்தது...


சற்று நிதானித்து

நிலமையை உணர்ந்தான்

அவள் காணாத வகையில்

சூதானமாக


அவன் முகத்தை

ஜன்னலின் பின்னும்

அவள் முகத்தை

மனதின் பின்னும்

மறைத்துக்கொண்டு


பயணத்தைத்தொடர்ந்தான்

அவளை துணைக்கு

அழைத்துக்கொண்டு..!


**********
என் கவிதைகளை வாசித்தமைக்கு நன்றி. கவிதைகள் தொடர்பான உங்கள் கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன். கவிதைகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் .


எனது மற்ற புத்தகங்களையும் வாசித்துப்பாருங்கள்.


அன்புடன்,

ராஜா முகமது காசிம்

healerrmk@gmail.com


**********
Books by author


Available on Google playbook, Apple store, Smashwords.com, aarokia.com/ebooks


1. Merawat penyakit kencing manis tanpa ubat

2. Pengenalan kepada Reiki

3. Agama yang sebenar

4. திருக்குறள் கூறும் மருத்துவம்

5. மௌனத்தின் சாரல்கள் - ஹைக்கூ கவிதைகள்

6. மௌனத்தின் வார்த்தைகள் - காதல் கவிதைகள்


**********Websites:

http://aarokia.com

http://aarokia.com/ebooks

http://www.kavithaicoffee.blogspot.com

http://varmahealing.blogspot.comFacebook:

https://www.facebook.com/kavithaicoffee

https://www.facebook.com/OruKathaiSollataSir

https://www.facebook.com/tamilbookstore

https://www.facebook.com/aarokia7


**********Download this book for your ebook reader.
(Pages 1-47 show above.)